நம் உடலில் உள்ள திசுக்களில் தேவையான சக்தியை, இரத்தத் தில் உள்ள குளுக்கோஸ் கொடுக்கிறது. இருப்பினும் குளுக்கோஸை திசுக்களில் செலுத்த இன்சுலின் என்ற ஹார்மோன் தேவைப்படுகிறது. வயிற்றின் பின் பகுதியில் கணையம் என்னும் சுரப்பி உள்ளது.இங்கு இருந்து தான் இன்சுலின் உற்பத்தியாகிறது. இன்சுலின் அளவு குறையும்போது, உடலில் உள்ள திசுகளுக்கு தேவையான குளுக்கோஸை இரத்தத்தில் இருந்து பெற முடிவதில்லை.இதனால் இரத்த ஓட்டத்தில் சக்கரையின் அளவு அதிகமாகிறது.
இரத்த ஓட்டத்தில் சேரும் அதிகப்படியான சக்கரையானது இதயம், சிறு நீரகங்கள், கண்கள், மற்றும் நரம்பு மண்டலம் மற்றும் இரத்த நாளங்களை பாதிக்கிறது.சரியான முறையில் மருத்துவர் ஆலோசனைகளைக் கடைப்பிடிக்காமல் இருந்தால் மோசமான விளைவுகளுக்கு ஆளாகி விடுவோம். சில சமயங்களில் மரணத்திலும் முடியலாம். இரத்த சக்கரையின்(Diabetes) அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள், மேலே குறிப்பிட்டுள்ள உபாதைகளினால் பாதிக்காமல் தங்களை காத்துக் கொள்ள முடியும்.
சரியான முறையில் கவனம் செலுத்தினால் நீரிழிவு நோய் இருந்தாலும் சராசரியான, திருப்திகரமான வாழ்க்கையை நடத்தலாம். அதிகப்படியான கவனத்துடன் சுயகட்டுப்பாடுடன் வாழ வேண்டும். சுய கட்டுப்பாடு என்பது சரியான உணவை தினம் தோறும் உட்கொள்வது, உடற்பயிற்சி செய்தல், உடலில் அதிகப்படியான எடையை குறைத்தல், இரத்தப் பரிசோதனைகளை சரியான கால கட்டங்களில் செய்தல், மருத்துவர் ஆலோசனைப்படி மருந்துக்களை உட்கொள்வது.